தினத்தந்தி' நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த பாடம் பிளஸ் 1 வகுப்பில் இடம்பெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் 192 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து "கனவு ஆசிரியர்' விருது வழங்க உள்ளோம். ரூ.10 ஆயிரம் பரிசு தொகையுடன் சான்றிதழும் வழங்கப்படும்.
பள்ளிக்காக சிறந்த முறையில் பணியாற்றுவதுடன், மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு இந்த விருது அளிக்கப்படும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பாடத்துடன் நற்பண்புகளையும் கற்றுத் தரும் வகையில் ஆசிரியர்களுக்கு கையேடு ஒன்றையும் அளிக்க உள்ளோம்.
எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்ததில் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாருக்கு முக்கிய பங்கு உண்டு. அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் பாடத்திட்டங்களை மாற்றும்போது, 11-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் சி.பா.ஆதித்தனாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த பாடத்தை இணைக்க உள்ளோம்.
மத்திய அரசின் பொதுத் தேர்வுகளுக்காக ஸ்பீடு நிறுவனத்தின் மூலம் 100 இடங்களில் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் 75 ஆயிரம் மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள 312 மையங்களுக்கு ஜனவரி 15-ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவுபெறும் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment