சென்னை: ''மாவட்டம் தோறும், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆறு ஆசிரியர்களுக்கு, கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன், சென்னையில், நேற்று அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான, அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் கல்வியிலும், அடிப்படை கட்டமைப்பிலும் சிறந்து விளங்கும் அரசு பள்ளிகளுக்கு, 'புதுமைப்பள்ளி' விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல், அரசு பள்ளிகளில், மாணவர்களை அதிக அளவில் தேர்ச்சி பெற வைப்பதுடன், காலந்தவறாமல் பள்ளிக்கு வந்து சிறப்பாக செயல்படும் ஆசிரியர்கள், மாவட்டத்திற்கு ஆறு பேர் என, 192 பேருக்கு, 'கனவு ஆசிரியர்' விருது வழங்கப்பட உள்ளது.
மாணவர்கள் எந்த போட்டி தேர்வையும் சமாளிக்கும் வகையில், அரசு சார்பில், இலவச பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும். மேலும், அடுத்த ஆண்டில் இருந்து, புதிய பாடத்திட்டத்தை மாற்றவும், தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், முறைகேடு புகார்கள் எழுந்ததால், தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விரைவில், திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்த முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பாடத்திட்டத்தில் ஆதித்தனார் வரலாறு : அமைச்சர் செங்கோட்டையன் மேலும் கூறியதாவது:
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, புதிய பாடத்திட்டத்தில் இடம் பெறும். 'தினத்தந்தி' நிறுவனர், சி.பா.ஆதித்தனாருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், பிளஸ் 1 பாடத்திட்டத்தில், ஊடக தமிழில், அவர் நடைமுறைப்படுத்திய, எழுத்து சீர்திருத்த வரலாறை இணைக்க உள்ளோம். மாணவர்களுக்கு கல்வியை கற்றுத் தரும் முறை குறித்து, ஆசிரியர்களுக்கு கையேடு வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment