தில்லியில் 30 அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தில்லி தலைமைச் செயலக கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியதாவது: தில்லி அரசின் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளில் தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு நிறுவனம் (டிடிடிடிசி) சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது. தில்லியில் உள்ள 30 அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் திட்டப் பணிகளை டிடிடிடிசியின் பொறியியல் பிரிவு மேற்கொள்ளும். பள்ளிகளின் பாதுகாப்பு மற்றும் நீடித்தத் தன்மையை டிடிடிடிசி உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பள்ளிகள் தனியார் பள்ளிகள் போல உருவாக வேண்டும் என்றார் அவர்.
சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா பேசுகையில், "தில்லியில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்துவதில் டிடிடிடிசி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுது பெருமையாக உள்ளது. தரம் உயர்த்தப்படவுள்ள பள்ளிகளின் நிலவரம் குறித்து தினமும் மேற்பார்வையிடுவேன். இந்தப் பணிகளை குறித்த காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கபில் மிஸ்ரா.
No comments:
Post a Comment