தமிழக ஆசிரியர் கூட்டணி சங்ககிரி வட்டார கிளை சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளி நேரத்தில் கணக்கெடுப்புப் பணிக்கு செல்ல அனுமதி வழங்குமாறு தமிழக முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
தமிழக ஆசிரியர் கூட்டணி சங்ககிரி வட்டாரக் கிளை சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளது:
சங்ககிரி வட்டாரத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், சத்துணவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளி நேரத்தில் கணக்கெடுப்புப் பணிக்கு செல்லுவதற்கு கல்வி அலுவலர்களால் அனுமதி மறுக்கப்படுகிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக 20 வீடுகளில் மட்டுமே கணக்கெடுக்க இயலும். ஒரு ஆசிரியருக்கு குறைந்தபட்சம் 300 வீடுகளில் இருந்து அதிகபட்சம் 500 வீடுகள் வரை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு மாதம் முழு வேலைநாள்களில் கணக்கெடுத்தால் மட்டுமே இப்பணியை முடிக்க இயலும். இந்த நிலையில் கிராமப் புறங்களில் வீடுகள் பல கிலோ மீட்டருக்கு இடையில் அமைந்துள்ளதால் பாதுகாப்பற்ற சூழ்நிலையால் பெண் ஆசிரியர்கள் கணக்கெடுப்புப் பகுதிக்குச் செல்ல அச்சப்படுகின்றனர். மாலை நேரங்களில் நாய்கள் தொந்தரவும் அதிகமாக உள்ளன. மேலும், ஏற்கெனவே தேர்தல் பணிக்காக நியமிக்கப்படடுள்ள ஆசிரியர்களுக்கு இப்பணி கூடுதலாக கொடுக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு அதிகமான சுமைகள் ஏற்பட்டுள்ளன.
எனவே, தமிழக முதல்வர், சேலம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வேலை நாள்களில் சூழற்சி முறையில் ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு செல்ல அனுமதி வழங்குமாறு அதில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மனு மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment