APAAR: 'மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண்' திட்டம்' - எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்!
கோபாலகிருஷ்ணன்.வே
"ஏற்கெனவே மத்திய அரசு கொண்டுவந்த ஆதார் அட்டையின் மூலமாக மக்களின் விவரங்கள் திருட்டுப்போய்விட்டன. மீண்டும் இந்தத் திட்டத்தை கொண்டுவருவது அடுத்த தகவல் திருட்டுதான்." - தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒரு பகுதியாக 'ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள எண்' திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இதன்படி ப்ரீ பிரைமரி வகுப்பு முதல் உயர்கல்வி வரையில் தானியங்கி நிரந்தரக் கல்வி கணக்கு பதிவு (APAAR) செய்யப்படுகிறது. ஆதார் எண் போன்று 12 இலக்கம்கொண்ட அபார் (APAAR) எண் மாணவர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் உயர்கல்வி பெறும் வரை இந்த எண் பயன்படும் வகையில் வடிவமைக்கப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாணவரின் படிப்பு, சாதனைகள் குறித்து எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். தற்போது இதற்கான பணிகளைத் தொடங்கும்படி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரேதசங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் குறித்து 18-ம் தேதி வரை பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் அமைத்து கருத்துகள் கேட்க அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
ஆதார் அடையாள அட்டைக்கு எப்படித் தகவல்கள் சேகரிக்கப்பட்டனவோ அதேபோல், இதற்கும் சேகரிக்கப்படும். இதன் மூலம் 'போலிச் சான்றிதழ்கள், போலி மதிப்பெண்கள் உருவாக்கப்படுவதைத் தவிர்க்க முடியும். பள்ளிகள், கல்லூரிகள் மாறும்போது தரவுகளை கல்வி நிறுவனங்கள் எளிதாக எடுத்து சரிபார்த்துக்கொள்ள முடியும். அலுவலகப் பணிகளில் சேரும்போதும் இந்த எண்ணைக்கொண்டு பயனரின் கல்வி விவரங்களை அறிந்துகொள்ள முடியும்' என, மத்திய கல்வித்துறை அமைச்சக வட்டாரங்கள் சொல்கின்றன. மறுபுறம் `ஒரே நாடு ஒரே தேர்தல்’, `ஒரே நாடு ஒரே ரேஷன்’ என்ற அடிப்படையில், `ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண்’ என்ற திட்டத்தையும் மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருப்பதாகக் கொதிக்கின்றன எதிர்க்கட்சிகள்.
இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "இவை ஏகாதிபத்தியத்தினுடைய அடிப்படைக் கொள்கைகள். இந்த மாதிரியான விஷயங்களை ஒருபோதும் தி.மு.க ஏற்றுக்கொள்ளாது. எல்லோருக்கும் ஒரே அட்டை, எல்லோருக்கும் ஒரே எண் என்பது கடைசியில் எல்லோருக்கும் ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என்பதில் நிற்கும். மாற்றுப் பழக்கம், மாற்றுக் கலாசாரம் கொண்டவர்களை இரண்டாம் தர குடிமக்களைப்போல் ஆக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில்தான் படிக்கிறார்கள். 10% க்கும் குறைவானவர்கள்தான் பிற இடங்களுக்குச் செல்கிறார்கள். அவர்களின் தகவல்களை மாநில கல்வித்துறைகள் வைத்திருக்கும். பிறகு ஏதற்கு நீங்கள் கொடுக்கிறீர்கள்... மத்திய அரசு நடத்தும் கல்வி நிலையங்களில் வேண்டுமானால் அப்படிக் கொடுக்கலாம். எனவே இது அடிப்படை அறிவு, பகுத்தறிவு இல்லாத திட்டம். ஏற்கெனவே இவர்கள் கொண்டுவந்த ஆதார் அட்டையின் மூலமாக மக்களின் விவரங்கள் திருட்டுப்போய்விட்டன. மீண்டும் இந்தத் திட்டத்தை கொண்டுவருவது அடுத்த தகவல் திருட்டுதான்" என்றார்.
இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "நல்ல விஷயங்களை எதிர்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. இது மிகப்பெரிய கண்டனத்துக்குரிய விஷயம். நாட்டில் இருக்கும் மாணவர்களின் கல்வித்தகுதி, கடந்துவந்த பாதை, செய்த சாதனைகள், அவர்களின் விருப்பம் என அனைத்தையும் ஒரே தளத்தில் கொடுப்பதுதான் இந்த அற்புதமான திட்டம். இன்றைய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி, மாணவர்கள் பயன் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு செய்திருக்கும் ஒரு காரியத்தை, என்னவென்றே தெரிந்துகொள்ளாமல், அறிந்துகொள்ளாமல் எதிர்க்கிறார்கள்.
நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி
இந்தத் திட்டம் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி, அருமை பெருமைகளை பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அப்போது பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லையென்றால், திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும். இது மாணவர்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது. உதாரணத்துக்கு ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு மாணவர்கள் செல்ல வேண்டுமென்றால், பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், இந்தத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு அது போன்ற பிரச்னைகள் இருக்காது. நவீன தொழிநுட்பத்தின்கீழ் எளிதாகச் செய்துகொள்ள முடியும்" என்றார்.
நன்றி
விகடன்.காம்

No comments:
Post a Comment