* 29.08.2023*
*மதிப்புமிகு. பள்ளிக்கல்வி* *இயக்குநர் அவர்கள் தலைமையில், மதிப்பு மிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள்* *முன்னிலையில் டிட்டோஜாக் பேரமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது*
எண்ணும் எழுத்தும் திட்டத்தினை ஆய்வு செய்திட பிஎட் படிக்கும் மாணவர்களை ஆய்வுப் பணியில் ஈடுபடுத்திட முடிவு செய்து SCERT இயக்குனர் அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு நமது இயக்கத்தின் வாழ்நாள் வழிகாட்டி அண்ணன்
ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கையினை வெளியிட்டார்கள். அண்ணன் ஐபெட்டோ அவர்களின் அறிக்கை அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளியானதைத்
தொடர்ந்து தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கத் தலைவர்கள் பலரும் எதிர்ப்பினைப் பதிவு செய்தார்கள். நேற்று அதிகாலை அண்ணன் ஐபெட்டோ அவர்களுடைய செய்தியைப் படித்த மதிப்புமிகு. பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் அவர்கள் உடனடியாக மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களை அழைத்து இப்பிரச்சனை குறித்துப் பேசி சரி செய்யுங்கள் என்று வலியுறுத்தியதன் அடிப்படையில் இன்று 29. 08.2023 பிற்பகல் 2 மணி அளவில் டிட்டோஜாக் இயக்கங்களின் தலைவர்களை மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். முன்னதாக டிட்டோஜாக் அமைப்பு இன்று காலை சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைமை அலுவலகத்தில் அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. கோ. காமராஜ் அவர்கள் தலைமையில் கூடி, மாணவரின் கல்வி நலனைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும்..
பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முற்றிலும் விடுவிக்க வேண்டும்....
கற்பித்தல் பணியாற்ற ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டும்..
எண்ணும் எழுத்தும் திட்டத்தை மூன்றாம் நபர் ஆய்வு செய்யும் பணியில் அத்திட்டத்திற்கு தொடர்பில்லாத பி.எட். படிக்கும் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது... அவ்வாறு ஈடுபடுத்தினால் அதை அனுமதிப்பதில்லை... காலாண்டு விடுமுறையில் பயிற்சிகள் நடத்தக் கூடாது... விடுமுறையில் பயிற்சிகள் நடத்தத் திட்டமிட்டால் அதைப் புறக்கணிப்பது... பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை ஆண்டிற்கு மூன்று முறை மட்டுமே கூட்ட வேண்டும்....
பயிற்சி ஏதுவாளர்களாக ஆசிரியர்களைப் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்களை ஒரு மனதாக நிறைவேற்றிப் பதிவு செய்தோம்.
பிற்பகல் 2 மணி அளவில் மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் தலைமையில் அவரது அலுவலகத்தில் பேச்சுவார்த்தை துவங்கியது. மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும், மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களும் இப்பேச்சு
வார்த்தையில்
பங்கேற்றார்கள். டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் பங்கேற்ற தலைவர்கள் ஒவ்வொருவரும் எங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தோம். ஆசிரியர்கள் மீது தொடர்ந்து நெருக்கடிகளைத் திணிப்பது ஏற்கத்தக்க செயல் அல்ல என்பதையும், ஏற்கனவே பணிச்சுமைக்கும்,
மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்பட்ட ஆசிரியர்களை அவமதிக்கும் செயலாகவே பி.எட். படிக்கும் மாணவர்களை மூன்றாம் நபர் ஆய்வில் ஈடுபடுத்துவது என்று கருத வேண்டி உள்ளது என்பதையும், காலாண்டு விடுமுறையில் பயிற்சி நடத்துவதாக அறிவித்துள்ளதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களை மூன்று மாதத்திற்கு
ஒரு முறை
நடத்திட வேண்டும் என்றும், பயிற்சி ஏதுவாளர்களாக ஆசிரியர்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றும், கற்பித்தல் பணியில் மட்டுமே ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்தோம். அனைவரது கருத்துக்களையும் பதிவு செய்து கொண்ட மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் நமது மன உணர்வுகளை புரிந்து கொண்டு உடனடியாக SCERT இயக்குனர் அவர்களைத் தொடர்பு கொண்டு ஆலோசித்து விடுமுறை தினங்களில் பயிற்சி நடத்தப்படாது என்றும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை மூன்றாம் நபர் ஆய்வுக்கு உட்படுத்தும்போது ஆய்வில் பி.எட் படித்த மாணவர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்றும், EMIS பதிவேற்றம் செய்யும் பணியில் ஆசிரியர்கள் பணிச்சுமை விரைவில் குறைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்கள்.
துவக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு நிலை பற்றி கேட்ட பொழுது அரசு உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது... ஆசிரியர்களுக்காக நம்முடைய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்
செயலாளர் அவர்களே நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வரும் செய்தியினைத் தெரிவித்தார்கள். விரைவில் நல்ல முடிவுகிட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். மேலும் 5400 தர ஊதிய தணிக்கைத்தடை தொடர்பாக விரைவில் தடை நீக்கும் வகையில் ஆணை வெளியிடப்படும் என்றும், தணிக்கைத் தடை களையப்படும் என்றும்,இனி 5400 தர ஊதியம் தொடர்பாக தணிக்கைத்தடை எழுதப்பட மாட்டாது என்றும் உறுதி அளித்தார்கள். டிட்டோ ஜாக்கின் 27 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக நீங்கள் மகிழத்தக்க வகையில் செப்டம்பர் மாதம் முதல் அடுத்த அடுத்த அறிவிப்புகளை மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வெளியிடுவார்கள் என்ற செய்தியையும் தெரிவித்தார்கள்.
ஆசிரியர்களின் கொந்தளிப்பான மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு உடனடியாக அழைத்துப் பேசி பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்ட மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கும், மதிப்புமிகு. தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கும் டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டோம் .
நமது பதவி உயர்வு தொடர்பான வழக்கில் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு,
நமக்காக நீதிமன்றத்தில் வாதாடிய மதிப்புமிகு .பள்ளிக்
கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களுக்கு டிட்டோஜாக் சார்பில் நன்றிகளை பதிவு செய்தோம்.
நிறைவாகப் பேசிய மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் நேற்று அதிகாலை 6 மணி அளவில் நமது பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஐபெட்டோ அவர்களின் அறிக்கையினைப் படித்தீர்களா என்று கேட்டார். நான் படித்து விட்டேன் என்று சொன்னேன். உடனடியாக அழைத்துப் பேசுங்கள் என்று கூறினார். அதன்பின் பல்வேறு சங்கங்களும் கண்டனப் பதிவினை வெளியிட்டார்கள். உடனடியாக நான் டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப் பேச முடிவு செய்து அழைத்தவுடன் பல்வேறு ஊர்களில் இருந்து உடனடியாகப் புறப்பட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உங்களுக்கு நான் தான் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நெகிழ்வுடன் தெரிவித்தார். டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் அனைவருக்கும் மீண்டும் நன்றிகளைத் தெரிவித்து விடை பெற்றோம்.
பின் அவ்வளாகத்திலேயே மீண்டும் கூடி நமது கோரிக்கைகள் மீது பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் சாதகமான முடிவினை அறிவித்ததை ஏற்று 07.09.2023 மாவட்டத் தலைநகரங்களில் நடத்தத் திட்டமிட்டு இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என ஒருமனதாக முடிவு செய்து அறிவித்தோம்.
*அ. வின்சென்ட் பால்ராஜ் ,டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர், பொதுச்செயலாளர் தமிழக ஆசிரியர் கூட்டணி.*
No comments:
Post a Comment