கள்ளர் கல்விக் கழகத்துக்குச் சொந்தமான நிலத்தை மோசடியாக விற்ற வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இருவர் உள்பட 17 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் புதன்கிழமை வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கள்ளர் கல்விக் கழகத்துக்கு மதுரை, தேனி மாவட்டங்களில் சொத்துகள் உள்ளன. இவற்றில், மதுரை பொன்னகரம் பகுதியில் 42 சென்ட் இடம் இருந்தது. அரசு மதிப்பின்படி, ரூ. 1.25 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய இந்த இடத்தை, தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 2004இல் ரூ.24.50 லட்சத்துக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நிலம் மோசடியாக விற்கப்பட்டதாக, கள்ளர் கல்விக் கழகத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில், கள்ளர் கல்விக் கழகத்தின் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட 20 பேர் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், 3 பேர் இறந்துவிட்டதையடுத்து, மீதமுள்ள 17 பேர் மீது உசிலம்பட்டி நகர் போலீஸார் கடந்த 2007இல் வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓ. ராமச்சந்திரன், தவசி, நிர்வாகி டாக்டர் சந்திரன், கள்ளர் கல்விக் கழகத்தின் முன்னாள் தலைவர் மாசாணம், முன்னாள் முதல்வர் சின்னன், போக்குவரத்து நிறுவன உரிமையாளர்கள் செந்தில்வேல், வேல்முருகன், ராஜராஜன், பாண்டி, கணேசன், ராமசாமி, பாண்டி, ஜெயப்பிரகாசம், சக்கரை, நெடுஞ்செழியன், பூங்கோதை, அம்சுக்கொடி ஆகிய 17 பேரும், உசிலம்பட்டி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்பேரில், ஆஜரான 17 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment