'பொது தகவல் அதிகாரி, தவறான தகவல் அளித்ததாக வரும் புகார்களை விசாரிக்க முடியாது' என, மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவால் சர்ச்சை எழுந்துள்ளது.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், அரசு நிர்வாக நடைமுறைகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் பெறலாம். இதற்காக விண்ணப்பிக்கும் போது, அரசு துறைகளில் உள்ள பொது தகவல் அதிகாரிகள், சில நேரங்களில், தவறான அல்லது சம்பந்தம் இல்லாத தகவல்களை அளித்து மனுதாரர்களை அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.இந்த சமயங்களில் மனுதாரர், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடமும், அவரை தொடர்ந்து, மாநில தகவல் ஆணையத்திலும் புகார் செய்யலாம்.
இதன்படி, சென்னை, பெரம்பூர், 'கர்னாட்டிக் மில் வில்லேஜ்' பகுதியை சேர்ந்த, சமூக ஆர்வலர்
கல்யாணசுந்தரம், புரசைவாக்கம் தாலுகா அலுவலக அதிகாரிகள் மீது தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த மனுவை விசாரித்த தகவல் ஆணையர் தட்சிணாமூர்த்தி, அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
தகவல் பெறும் உரிமை சட்டப்படி தகவல் மட்டுமே கோரலாம். 'ஆனால், வழங்கப்பட்ட தகவல் ஏற்புடையது அல்ல' எனும் புகார்கள், மேல் முறையீடுகள், கேள்விகள், கோரிக்கைகள், தகவல் பெறும் உரிமை சட்ட வரம்புக்குள் வராது. அவை, சம்பந்தப்பட்ட துறை மேலதிகாரிகளுக்கும், அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் மட்டுமே உரித்தானவை. ஆகவே, இம்மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல; நிராகரிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இது குறித்து தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் கூறியதாவது:தகவல் அறியும் உரிமை சட்டம் வழங்கி உள்ள அடிப்படை அதிகாரங்கள் குறித்ததகவல் ஆணையர்களின் நிலைபாட்டை வெளிப்படுத்துவதாக இது அமைந்து உள்ளது. இச்சட்டம் குறித்து ஆணையர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மாநில தலைமை தகவல் ஆணையர் அல்லது, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத்துறை இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சட்டம் என்ன சொல்கிறது?: தகவல் குறைபாட்டை விசாரிப்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின், 18வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தகவல் பெறும் உரிமை சட்டத்தை செயல்படுத்த மறுப்பது; தகவல் கேட்கும் மனுவை ஏற்க மறுப்பது; உரிய தகவல் அளிக்க மறுப்பது; தவறான அல்லது குறைபாடு உள்ள தகவலை அளிப்பது தொடர்பாக மனுதாரர் தெரிவிக்கும் புகார்களை, மாநில தகவல் ஆணையம் விசாரிக்கலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment