சென்னை : 'தமிழக பள்ளிகளில், தமிழ் மொழி, மூன்றாவது மொழியாக ஆக்கப்பட்டுள்ளதோடு, வாரத்திற்கு ஒரு முறை மட்டும், கற்பிக்கப்படும் மொழியாகவும் மாறி விட்டது' என, தி.மு.க., தலைவர், கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார்.
அவர், நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் கல்வி கற்போர், தமிழைப் படிக்காமலேயே, பல்கலைக் கழகம் வரை பட்டம் பெற்று, வெளிவரும் அவல நிலையை அகற்ற, தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி தான், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாக பெருகி, 10ம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும், தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது என்ற நிலை உருவானது.ஆனால், அரசு ஆரம்பப் பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி, மொழிக் கொள்கையில் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ள, அ.தி.மு.க., அரசில், தற்போது என்ன நிலை?
பல பள்ளிகள், தொடர்ந்து இந்தி மொழியை இரண்டாவது மொழியாக கற்பித்து வருகின்றன. தமிழ் மொழி, மூன்றாவது மொழியாக ஆக்கப்பட்டுள்ளதோடு, வாரம் ஒரு முறை மட்டுமே கற்பிக்கப்படும் மொழியாகவும் மாறி விட்டது.ஐ.சி.எஸ்.சி., - சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பலவற்றில், வாரத்தில், 20 முதல், 40 நிமிடங்களுக்கு மட்டுமே, தமிழ் மொழி வகுப்பு நடைபெறுகிறது. தமிழ் முதல் மொழியாகவும், ஆங்கிலம், இரண்டாவது மொழியாகவும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற நிலை மாறி, இன்றைக்கு ஏராளமான பள்ளிகளில், மூன்றாவது மொழி ஒன்றைக் கற்பிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய தமிழக அரசு, 'ஏட்டளவில் ஆணை பிறப்பித்து விட்டோம்' என்று சொல்லி, காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment