மதுரை: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவு குறித்து அவரது அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ் தினமலர் நாளிதழிடம் கூறியதாவது: 1995 முதல் மறைந்த முன்னாள் ஜனாதிபதியுடன் ஆலோசகராக நான் இருக்கிறேன். நேற்று முன்தினம் கூட தமிழக நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அவருடன் டில்லி சென்றேன். ஆக.,3ல் பெங்களூருவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் என்னை பங்கேற்க வேண்டும் என கூறியிருந்தார். அதற்குள் அவர் மறைந்து விட்டார் என்று அறிந்த போது என் மேல் இடி விழுந்ததை போல உணர்ந்தேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழக மக்களுக்கும் பெரும் இழப்பு. பெங்களூருவில் விஞ்ஞானியாக சேர்ந்த என்னை அவரோடு அழைத்து கொண்டார்.பதவி காலம் முடியும் வரை அவரோடு பணிபுரிந்த அனுபவம் மறக்க முடியாதது. இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவுடன் நாடு முழுவதும் சென்று இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தி, லட்சியங்களை வென்றெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியா 2020 ல் வல்லரசாகும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். நதிகள் இணைப்பு அவரது கனவு. ஏற்கனவே அவரும், நானும் இணைந்து 'மேனிபெஸ்டோ பார் சேஞ்ச்' என்ற நூலை எழுதியுள்ளோம். தற்போது அவரும் நானும் இணைந்து 'புயலை தாண்டினால் தென்றல்' என்ற புத்தகத்தை எழுதி, 7 பகுதிகளை முடித்துள்ளோம். அந்த புத்தகத்தை எப்படி முடிப்பது என்பது குறித்தும் ஏற்கனவே சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். கடந்த 16ம் தேதி என்னுடைய பி.எச்.டி., குறித்து இரவு 9.30 மணி முதல் 11 மணிவரை என்னோடு பேசிக் கொண்டிருந்தார்.மிகவும் எளிமையாவனர், யாரைப் பற்றியும் குறை கூறாமல் நிறைகளை மட்டுமே பார்க்கும் குணமுடையவர்.கலாமின் பேரிழப்பை எப்படி ஈடுசெய்வேன்? இவ்வாறு தெரிவித்தார்.
தினமலர் நாளிதழும் கலாமும்
தினமலர் நாளிதழ் சென்னையில் நடத்திய பள்ளி மாணவர்களுக்கான ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் ஒருமுறை அப்துல்கலாம் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.மதுரை பதிப்பில் ஜன.1,2015 ல் 'என் பார்வை' பகுதியில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 'வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்' என்ற கட்டுரையை கலாம் எழுதியிருந்தார். வரும் ஆக.,15 ல் சுதந்திர தினத்தை முன்னிட்டு தினமலர் என்பார்வை பகுதிக்கு அவர் எழுதுவதாக இருந்தது. இது குறித்து நேற்று நமது நிருபரிடம் ஆலோசகர் பொன்ராஜ் கூறியதாவது:கடந்த 25 ம் தேதி தினமலர் சுதந்திர தின கட்டுரை குறித்து என்னிடம் பேசினார். கட்டுரை பற்றிய சில குறிப்புகள் குறித்து என்னிடம் விளக்கினார், என்றார்.
No comments:
Post a Comment