அரசு ஊழியர்களின், கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், 2004 தேர்தலில் சந்தித்த விளைவை, அ.தி.மு.க., அரசு சந்திக்க நேரிடும்,'' என, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலர் சேகர், சிவகங்கையில் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு அவர் பேசியதாவது: அரசுத் துறை ஊழியர் போராட்டம் அறிவித்த போது, பேச்சுக்கு அழைத்த அரசு, சில சலுகையை மட்டும் வழங்கியது. புதிய பென்ஷன் திட்டம் ரத்து, காலமுறை சம்பளம் போன்ற பொது கோரிக்கையை, இதுவரை நிறைவேற்றவில்லை.
சில அமைச்சர்கள், அதிகாரிகள் பணியிட மாறுதல் மற்றும் பணி நியமனத்தில், கடும் வசூலில் ஈடுபடுகின்றனர். நடப்பு ஆண்டு, 15 லட்சம் கழிப்பறைகள் கட்டும்படி அரசு நிர்பந்திக்கிறது. அரசு ஊழியர், ஏழாவது ஊதியக் குழு மாற்றம் கோரி, போராடி வருகின்றனர். ஆனால், ஜூலை, 10ம் தேதி வெளியான, அரசு ஆணையில், நிதித் துறை செயலரின் உத்தரவில், 'எட்டாவது
ஊதியக்குழு பரிந்துரை வரும் வரை, எவ்வித கோரிக்கையையும் அரசிடம் வைக்க கூடாது' என, கூறியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலின்போது, கொளத்துாரில் ஜெயலலிதா பேசும்போது, 'புதிய பென்ஷன் திட்டம் ரத்து, அனைத்து துறை ஊழியரின் கோரிக்கையை நிறைவேற்றுவேன்' என்றார். இதுவரை நடக்க வில்லை.
2003 ஏப்ரல், ௧ம் தேதிக்கு பின், பணியில் சேர்ந்த ஊழியரின் சம்பளத்தில், 10 சதவீதம் பிடித்தனர். ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணம் எங்கே? செப்., 2ம் தேதி நடக்கும், பொது வேலை நிறுத்தத்தில், அரசு ஊழியர்களும் பங்கேற்பர். அரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்றி தராவிட்டால், 2004 தேர்தலில் சந்தித்த விளைவுகளை தான், இந்த அரசு சந்திக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment