சுகாதாரத் துறையில், புள்ளியியலாளர் பதவிக்கான தேர்வு முடிந்து, நான்கு ஆண்டுகள் ஆகியும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடுவது காலதாமதமாகிறது. இதனால், தேர்வர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத் துறையில், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கான, 49 காலியிடங்களை நிரப்ப, 2011 பிப்ரவரியில் எழுத்து தேர்வு நடந்தது. மூன்றரை ஆண்டுகள் கழித்து, எழுத்துத் தேர்வு முடிவு வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, 102 பேருக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்டில் நேர்காணல் நடந்தது. இதற்கான முடிவும், 10 மாதங்களாக வெளியிடப்படாமல், தேர்வர்களில் பலர் வேறு வேலைக்கு சென்று விட்டனர்.
இதுகுறித்து, தேர்வர் கள் கூறியதாவது:டி.என்.பி.எஸ்.சி., தேர்வு என்பதால், மிகுந்த நம்பிக்கையுடன் சிறப்புப் பயிற்சி எடுத்து, தேர்வை எழுதினோம். இதை நம்பி, எங்களில் பலர் வேறு வேலை மற்றும் திருமணம் போன்றவற்றை காலம் தாழ்த்தி வந்தனர். ஆனால், தேர்வு முடிவுகள் வெளியாக, ஆண்டுகணக்கில் தாமதமானதால், பலர் திருமணம் செய்தும், பல்வேறு தொழில் மற்றும் வேலைக்கும் சென்று விட்டனர்.
இதில் மிச்சம், மீதி உள்ள சிலர் மட்டுமே, நேர்காணலில் பங்கேற்றோம். அதற்கும் இன்னும் முடிவுகள் வரவில்லை. இதனால், தேர்வு எழுதியும் எங்களுக்கு நான்கரை ஆண்டுகள் வீணாகவே கழிந்து விட்டன. இனியாவது, நேர்காணல் முடிவை டி.என்.பி.எஸ்.சி., விரைவில் வெளியிட்டு, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment