ஆசிரியர்கள் மாணவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூரில் புதன்கிழமை மாண்புறு மக்களை இம்மண்தனில்
படைப்போம் இயக்கம், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட அனைவருக்கும் இடைநிலைக்
கல்வித் திட்டம் சார்பில் தயாரிக்கப்பட்ட எஸ்எஸ்எல்சி வகுப்பு மாணவர்கள்
மெல்ல கற்போற்கான வினா விடை வெளியீடு, இலக்கை அடைய தலைமையாசிரியர்களுக்கான
புத்தாக்க பயிற்சி ஆகிய முப்பெரும் விழாவைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்கள்
ஏணிப்படியாக இருந்து தூக்கிவிட வேண்டும். மாணவர்களை சிறந்த பண்பாளர்களாக
மாற்ற ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள
வேண்டும். மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படாத வகையில் அவர்களை
வழிநடத்தி, சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்குவது ஆசிரியரின் தலையாய
கடமையாகும்.
மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் திறமையை சிறப்பாக
வெளிப்படுத்த தயார் செய்ய வேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்கும் மாணவர்களின்
திறமை அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் எவ்வாறு பயன்படுத்துவது என்று
வழிகாட்டவும் வேண்டும்.
கல்வி கற்பது சுகமான அனுபவம் என்பதை புரிய வைக்க
வேண்டும். படிப்பது, எழுதுவது, வெளிப்படுத்துவது ஆகிய அடிப்படை ஆற்றலை
கற்றுக்கொடுத்து படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதும் ஆசிரியரின் பணி
என்றார் மதிவாணன்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் ஏ. மணி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட
உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கு. சரவணன், தஞ்சாவூர் ஸ்டேட் வங்கி
மண்டல மேலாளர் வி. சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment