இளநிலை பட்டப் படிப்பில் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு முதுநிலை பட்டப் படிப்புக்கான கல்விக் கட்டணம் முழுவதும் அரசு சார்பில் வழங்கப்படும் என பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக் கழகத்தின் சார்பில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதனையடுத்து, 2015-2016-ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை குறித்த ஆலோசனைக் கூட்டம், பெரியார் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் பேசியது: பெரியார் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளில், பருவத் தேர்வுகள் குறித்த காலத்தில் நடத்தப்பட்டு, உரிய நேரத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை பட்டப் படிப்பில் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெறும் மாணவ, மாணவியருக்கு முதுநிலை பட்டப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை முழுமையாக வழங்க மத்திய அரசின் பல்கலைக் கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை முழுமையாகப் பெற கல்லூரி நிர்வாகத்தினர் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், அரசின் பல்வேறு நிதிநல்கைக் குழுக்களிடமிருந்து, கல்வி சார் நிதியுதவி பெறுவதற்கும் பல்கலைக் கழகம் உதவி செய்யத் தயாராக இருக்கிறது என்றார்.
இந் நிகழ்ச்சியில், பதிவாளர் கே.அங்கமுத்து, தேர்வாணையர் எஸ்.லீலா, துணைத் தேர்வாணையர்(பொறுப்பு) ஜெ.செந்தில்வேல்முருகன், உதவிப் பதிவாளர் பி.கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment