உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாற்றுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.லெனின் பாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பிளஸ்1, பிளஸ்2 மாணவிகள் ஆவர்.
இந்நிலையில் இப்பள்ளியில் ஒரே ஒரு முதுகலை தமிழாசிரியர் மட்டுமே பணியாற்றி வருகிறார். இதனால், அனைத்து மாணவிகளுக்கும் தமிழ் மொழிப் பாடம் நடத்த முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. 600 மாணவிகள் 15 வகுப்புக்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்தி, விடைத்தாள்களை திருத்துவது என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. ஆகவே, இப்பள்ளிக்கு உடனடியாக கூடுதல் முதுகலை தமிழாசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment