சென்னை:அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், இன்ஜினியரிங் படித்து, எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தேர்ச்சி பெற முடியாதவர்களுக்கு, மீண்டும் தேர்வு எழுத சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படு கின்றன. இவற்றில் ஒவ்வொரு ஆண்டும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேருகின்றனர்.அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என, இரண்டு பிரிவாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த மாணவர்கள் அனைவரும், அண்ணா பல்கலை பாடத்திட்டத்தின் கீழ்நடத்தப்படும் பாடங்களை படித்து, தேர்வு எழுதுகின்றனர்.தேர்வுகளை, அண்ணா பல்கலையின் தேர்வு துறை நடத்துகிறது.பல்கலைக்கழக மானியக்குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படி, மாணவர்கள் தங்கள் படிப்பு காலமான, நான்கு ஆண்டுகளுக்குள், தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
முடியாவிட்டால், கூடுதலாக மூன்று ஆண்டுகள் மட்டுமே தேர்வு எழுத அவகாசம் தரப்படும். இந்த கூடுதல் அவகாசத்தில் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றாலும், பதக்கம் மற்றும் முதல் வகுப்பு வழங்கப்படக்கூடாது என்ற, கட்டுப்பாடு உள்ளது.ஆனால், அண்ணா பல்கலையில் படித்த மாணவர்கள் பலர், ஆண்டுக்கணக்கில் தேர்வு எழுத அனுமதிக்கப் படுகின்றனர்.
இதில், மாணவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணத்தால், பல்கலையின் தேர்வு துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.இந்நிலையில், யு.ஜி.சி., விதிகளை பின்பற்றியே, இனி தேர்வுகள் நடத்தப்படும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அண்ணா பல்கலை அறிவித்தது. இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள், 2018க்குள் தேர்வை முடிக்க வேண்டும் என்றும், இறுதி அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனாலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், எட்டு ஆண்டுகளாகியும் தேர்ச்சி பெற முடியாமல், பல பாடங்களில், 'அரியர்' வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள், மீண்டும் தேர்வு எழுத அவகாசம் கேட்டனர்.இதையடுத்து, எட்டுஆண்டுகளுக்கு மேலாக அரியர் வைத்துள்ளவர்கள், வரும், ஜூன் மாத தேர்வில் பங்கேற்க, அண்ணா பல்கலை,சிறப்பு அவகாசம் அளித்துள்ளது. இதற்கான கருத்துருக்கு, பல்கலையின் சிண்டிகேட் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
No comments:
Post a Comment