இன்று வெளியிடப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், ராமநாதபுரம் மாவட்டம் 98.48 சதவிகிதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 255 பள்ளிகளைச் சார்ந்த 8,240 மாணவர்கள், 8,383 மாணவியர் என 16,623 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். பள்ளிக் கல்வித் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான முடிவுகளின்படி, மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 8,081 மாணவர்களும், 8,289 மாணவியரும் என 16,370 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவிகித அடிப்படையில், மாணவர்களின் தேர்ச்சி 98.07 சதவிகிதமாகவும் மாணவியரின் தேர்ச்சி 98.88 சதவிகிதமாகவும் ராமநாதபுரம் மாவட்ட மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி சதவிகிதம் 98.48 சதவிகிதம் பெற்று மாநில அளவில்
இரண்டாமிடம் பெற்றுள்ளது.
மேலும் மாவட்டத்திலுள்ள 255 பள்ளிகளில் 178 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இவை மட்டுமன்றி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 131 அரசு பள்ளிகளில் 94 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வெழுதிய அரசுப் பள்ளிகளைச் சார்ந்த 5,757 மாணவ, மாணவியர்களில் 5,657 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவிகிதத்தில் 98.26 சதவிகிதம் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. மாநில அளவிலான இந்தச் சாதனையை முதன் முதலாக ராமநாதபுரம் மாவட்டம் படைத்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் தேர்வெழுதிய 62 மாற்றுத்திறன் மாணாக்கர்களில் 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம் பெற்ற பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும், கடுமையாக உழைத்த மாணாக்கர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன், செய்தி மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரேம் (ராமநாதபுரம்), பாலதண்டாயுதபாணி (மண்டபம்), ராமர் (பரமக்குடி) ஆகியோருக்கும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment