தமிழக அரசுக்கு ஓ ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடந்த 8 நாள்களுக்கும் மேலாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். `ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்' என நேற்று அழைப்புவிடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இருப்பினும், போராட்டம் நீடிப்பதால் 1,300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். `9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும்' என சங்கங்கள் அறிவித்துவிட்டன. இதுதொடர்பாக இன்று பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `நிதி நிலைமை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும். தற்போதைய நிதிநிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை ஏற்க இயலாது. கொடுப்பதற்கு மனசு இல்லை என்பது அல்ல, இது கொடுப்பதற்கான நேரம் அல்ல' என விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
பள்ளிகளுக்கு 99.9 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டதாகப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கணக்கு சொல்கின்றனர். நேற்றைய கணக்கின்படி, பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் 950 ஊழியர்களும் தொடக்கக் கல்வித்துறையில் 4,350 ஊழியர்களும் பணிக்கு வரவில்லை. ஒரு சிலர் மட்டுமே போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுப் பணிக்குத் திரும்பியுள்ளனர். எங்களது கோரிக்கைகளை தளர்த்திக்கொண்டு முதல்வரிடம் பேசத் தயார் என அறிவித்தும், எங்களிடம் பேசுவதற்கு முதல்வருக்கு விருப்பமில்லை. நாங்களும், பேச்சுவார்த்தைக்கு அழைக்காத வரையில் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. தற்காலிக ஆசிரியர்களை நியமித்து, எங்களைப் பழிவாங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. சம்பளம் போனால் போகட்டும் என உறுதியான முடிவை எடுத்துத்தான் போராட்டத்துக்கு வந்தோம். எங்களுக்குக் காலக்கெடுவை நிர்ணயித்து அரசு பழிவாங்குகிறது. இனியும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை" என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.
சம்பளத்தை நிறுத்தி வைப்பதால், ஆசிரியர்கள் பலரும் பணிக்குத் திரும்பிவிடுவார்கள் என அரசு நினைக்கிறது. ஆனால், கருவூலத் துறையின் கள நிலவரத்தை அறியாமல் அரசு அலட்சியமாகச் செயல்படுகிறது" என நம்மிடம் விவரித்தார் கருவூலத்துறை உயர் அதிகாரி ஒருவர். தொடர்ந்து நம்மிடம் அவர் பேசினார். ``மாநிலம் முழுவதும் 260 சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. 32 மாவட்ட கருவூலங்களில் இருந்தும் மாதம்தோறும் சம்பளப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகங்களிலிருந்து சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளக் கணக்கு தயார் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 21-ம் தேதியே சம்பளப் பட்டியலை நிறைவு செய்து அனுப்பிவிடுவோம்.
30 அல்லது 31-ம் தேதிக்குள் அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சம்பளம் சென்றுவிடும். ஒவ்வொரு அலுவலகங்களில் இருந்தும் பணம் பெற்று வழங்கும் அலுவலரிடம் (ட்ராயிங்) இருந்து எங்களுக்குப் பட்டியல் வந்துவிடும். அதன் அடிப்படையில்தான் சம்பளத்தை வழங்குகிறோம். இந்தநிலையில், கடந்த 22-ம் தேதியிலிருந்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போது முழு மாதத்துக்கான சம்பளம் வழங்கப்பட இருப்பதால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பத்து நாள்களுக்கான சம்பளத்தை நிறுத்தி வைப்பது இயலாத காரியம். இதை அறிந்துதான் வங்கிகளுக்குத் தடை உத்தரவு போட்டிருக்கிறார்கள்" என்றவர்,

``இதனால், போராட்டத்தில் பங்கேற்காமல் பாடம் எடுக்கும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக உத்தரவு போடுகிறார்கள். நேற்று முன்தினம் வந்த உத்தரவில், `போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிந்து, இந்தப் பத்து நாளுக்கான சம்பளத்தை அவர்களிடமிருந்து வாங்குங்கள்' எனக் கூறியுள்ளனர். ஒவ்வொருவரையும் தேடிக் கண்டுபிடித்து வாங்குவது என்பது நடைமுறையில் சாத்தியமல்ல. இதைக் கருவூலத் துறை அதிகாரிகளால் சமாளிக்க முடியவில்லை. இங்கு ஆள் பற்றாக்குறை உட்பட பல்வேறு நிர்வாகரீதியான குளறுபடிகள் உள்ளன. ஏறக்குறைய மாநிலம் முழுவதும் சம்பளப் பணமாக 350 கோடி ரூபாய்க்கும் மேல் முடக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்த விவரங்களை ட்ராயிங் அலுவலர்களிடம் கேட்டிருக்கிறோம். அதிலும், இந்தப் பத்து நாளுக்கான சம்பளத்தை 31.1.19-க்குள் செலுத்திவிட வேண்டும் என கண்டிஷன் போட்டிருக்கிறார்கள்.

நாளைக்குள் இந்தப் பணத்தை வசூலிப்பது சாத்தியமற்றது என அரசுக்கு யார் புரிய வைப்பது? இந்தப் பணத்திலிருந்து பத்துப் பைசாவைக் கூட வசூலிக்க முடியாது. இப்படியொரு உத்தரவே புதுமையாக இருக்கிறது. இதற்கு முன்பு இப்படியெல்லாம் நடந்தது இல்லை. `எங்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை' என்பதால்தான் போராட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று, ` உனக்குப் பத்து நாள் சம்பளத்தை அதிகப்படியாகப் போட்டுவிட்டோம். அந்தப் பணத்தை உடனே கட்டு' எனச் சொல்வது எந்த வகையில் சரியானது. இவர்கள் வைக்கும் டெட் லைனில் எதையும் சாதிக்க முடியாது. இந்தப் பத்து நாள் சம்பளத்தை அடுத்த மாதச் சம்பளத்தோடு ஈடுகட்டுங்கள் என்பதுதான் சரியானதாக இருக்கும். வங்கிக்கு அனுப்பிய பணத்தை நிறுத்தி வைத்தது என்பது மிகக் கொடுமையானது" என்றார் வேதனையோடு.
No comments:
Post a Comment