சென்னை : 'அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 7 சதவீதத்திலிருந்து, 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது' என முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசு அலுவலர்களுக்கு 2018 ஜூலை 1 முதல் கூடுதல் தவணையாக அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படியை ஜூலை 1 முதல் கூடுதல் தவணையாக 2 சதவீதம் அதிகரித்து, தற்போதுள்ள 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அலுவலர்களுக்கும் இந்த உயர்வு உண்டு. மேலும் பல்கலை மானிய குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் குழு சம்பள வீதங்களின் கீழ் வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவன ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், நுாலகர்களுக்கும் அகவிலைப்படி உயரும். இதனால் அரசு ஊழியர்களுக்கு 314 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 157 ரூபாய் முதல் 2,250 ரூபாய் வரை உயர்வு கிடைக்கும். கிராம உதவியாளர், சத்துணவு அமைப்பாளர், குழந்தைகள் நல அமைப்பாளர், அங்கன்வாடிப் பணியாளர், சத்துணவு சமையலர், உதவியாளர், ஊராட்சி செயலர்கள், எழுத்தர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கும் இது பொருந்தும்.
கூடுதல் தவணை :
அகவிலைப்படி ஜூலை மற்றும் ஆகஸ்ட் காலத்திற்கு நிலுவையாகவும் செப்., முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன் பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1,157 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment