மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மாநிலம் முழுவதும் 412 ஒன்றியங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த போராட்டங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அரசாணையில், தமிழக மாணவர்களை நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் ரூ.20 கோடி மதிப்பில் 412 ஒன்றியங்களில் பயிற்சி மையங்களைத் தொடங்க உள்ளது. அந்த மையங்களில் மையத்துக்கு 8 ஆசிரியர்கள் வீதம் 3,296 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மண்டலங்களில் அங்குள்ள ஏதாவது ஒரு பள்ளியில் இருந்து அனைத்து மையங்களுக்கும் காணொளி காட்சி மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு பயிற்சி மையத்துக்கும் 65 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அனைத்து மாணவர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்க முடியாதா என கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன் இதுகுறித்து அரசின் கருத்தை தெரிவிக்க உத்தரவிட்டு ,இந்த வழக்கின் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment