பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஒற்றைச்சாளர முறையான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த பொறியியல் கலந்தாய்வு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்குப் பின் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.
நேற்று (20.06.2017) அண்ணா பல்கலைக்கழகத்தில் ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் 'பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், வேளாண்மை மற்றும் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுகள் நடத்திய பின்பே பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தப்படும்' என்றும் தெரிவித்து இருக்கிறார்.
நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியிட வாய்ப்பு இருக்கிறது. நீட் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின்பு, மருத்துவ படிப்புக்கான கவுன்சலிங்கில் கலந்துக்கொள்வதற்கு பதினைந்து நாட்கள் வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் மருத்துவ படிப்புக்கான கவுன்சலிங் நடத்தப்படும். அதன் பிறகே பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் தள்ளிப் போவதன்மூலம் மருத்துவ படிப்புக்கு சேர ஆர்வம் உள்ள மாணவர்கள் பொறியியல் சேராமல் நேரிடையாக மருத்துவ படிப்பிலேயே சேர வாய்ப்பு உருவாக்கி இருக்கிறார் உயர்கல்வி துறை செயலர் சுனில் பாலிவால்.
இந்த ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகள் மூட விருப்பம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் 3000 முதல் 5000 பொறியியல் படிப்புக்கான இடங்கள் குறையும். மேலும், அண்ணா பல்கலைக்கழகம் 44 பொறியியல் கல்லூரிகளுக்கு கட்டமைப்பு மற்றும் தரம் குறித்து விளக்கமளிக்கக் கடிதம் எழுதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment