நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களின் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையின்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படியே நடத்த வேண்டும்.
அவ்வாறு நடத்தாவிட்டால் அது நீதிமன்றத்தை அவமதிப்பதாகிவிடும் என்பதால் சரியான வகையில் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறது பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி).
இந்தியாவில் 34 நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் மாணவர் சேர்க்கையின் போது நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மே 9-ம் தேதி உத்தரவிட்டு இருக்கிறது.
இந்த உத்தரவில் 'மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15% இடங்களை வழங்க வேண்டும். இதைப்போலவே, நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 15% இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும். இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மருத்துவ படிப்புக்கான கவுன்சலிங் நடக்கும் போது தனியார் மற்றும் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடமிருந்து எவ்வளவு கட்டணம் பெறப்படுகிறது என்ற விவரங்களை முன்னரே மாணவர்களுக்கும், மாநில அரசுக்கும் தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment