சென்னை: விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆராய, 2007ல், நீதிபதி மோகன் தலைமையில் குழு அமைக்கப் பட்டது. இக்குழுவின் பரிந்துரைப்படி, '2007, ஜூலைக்கு முன் கட்டப்பட்ட, விதிமீறல் கட்டடங்கள் வரன்முறைப்படுத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது.
இதற்காக, நகரமைப்பு சட்டத்தில், 113சி என்ற, புதிய பிரிவும் சேர்க்கப்பட்டது. ஆனால், வரன்முறையை செயல்படுத்த, 2012ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து, புதிய விதிமுறைகள் வகுக்க, நீதிபதி ராஜேஸ்வரன் குழு அமைக்கப்பட்டது. அக்குழு பரிந்துரைப்படி, விதிமுறைகள் வகுக்கப்பட்டு, மக்களிடம் கருத்து கோரப்பட்டது.
ஆனால், அவை செயல்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசு முடிவு எடுக்காமல் இருந்தது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த கிடுக்கிப்பிடியால், தற்போது, விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்த, அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
நீதிபதி ராஜேஸ்வரன் குழு, '2.7 மடங்கு வரை, கூடுதல் தளங்கள் கட்டப்பட்ட கட்டடங்களை, வரன்முறை செய்யலாம்' என, பரிந்துரைத்திருந்தது. ஆனால், இதில் நடைமுறை தேவைக்கு ஏற்ப திருத்தங்களை செய்து, புதிய அரசாணையை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் என்ன?
l சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - நகர் ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி., அதிகார பகுதிகளில், 2007, ஜூலைக்குள் கட்டப்பட்ட, கட்டடங்களில் விதிமீறல்கள் இருந்தால், அவை, நகரமைப்பு சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட, 113சி பிரிவின் கீழ், வரன்முறைப்படுத்தப்படும்
l கட்டடம், 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்டதை உறுதி செய்யும் ஆவணம்; விண்ணப்பதாரர், கட்டடத்தின் உரிமையாளர் என்பதற்கான ஆவணம் வேண்டும். கட்டடத்தின் உறுதித்தன்மை; விதிமீறல்கள்; கட்டடத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த பொறியாளர்களின் சான்றுகள் வேண்டும்
l வரன்முறைக்கு, 'ஆன்லைன்' முறையில், ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சாதாரண கட்டடங்களுக்கு, சதுர அடிக்கு, 1 ரூபாயும், மற்ற கட்டடங்களுக்கு சதுர அடிக்கு, 2 ரூபாயும், முதல் நிலை சரிபார்ப்பு கட்டணமாக வசூலிக்கப்படும்
l வரன்முறைக்கு தகுதி பெற்றால், அதற்கான கட்டணங்கள் குறித்த, 'நோட்டீஸ்' வழங்கப்படும்; நீர் நிலை ஆக்கிரமிப்பு, ஆட்சேபகரமான, அபாயகரமான பகுதி, நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் காப்பு காடுகளுக்கு அருகில் இருக்கும் நிலங்களில், கட்டப்பட்ட கட்டடங்கள் வரன்முறை செய்யப்படாது
l சி.எம்.டி.ஏ., - -- டி.டி.சி.பி., எல்லைக்குள் அமைந்துள்ள சாதாரண கட்டடங்களில், இரண்டு மடங்கு வரை, கூடுதல் பரப்புகள் இருக்கலாம். சாலை வசதி இருக்க வேண்டும்; வளர்ச்சி விதிகளின்படி, வாகன நிறுத்தும் வசதி இருக்க வேண்டும்; பக்கவாட்டு காலியிடங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை
l சிறப்பு கட்டடங்களில், மூன்று மடங்கு வரை கூடுதல் கட்டட பரப்பு இருக்கலாம்; 7 மீட்டர் அகல சாலை இருக்க வேண்டும். குறைந்தபட்ச பக்கவாட்டு காலியிடங்கள் இருக்க வேண்டும்.
அபராதம் எவ்வளவு?
l கட்டடங்களில், தளபரப்பு தவிர்த்து, மற்ற விதிமீறல்கள் இருந்தால், 100 சதவீதம்; மூன்று மடங்கு வரை கூடுதல் தளங்கள் இருந்தால், 200; மூன்று மடங்குக்கு மேல் கூடுதல் தளங்கள் கட்டப்பட்டு இருந்தால், 300 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்
l குடியிருப்பு கட்டடங்களில், கார் நிறுத்துமிட விதிமீறல் இருந்தால், 10 ஆயிரம் ரூபாய், வணிக கட்டடங்களில், சென்னையில், 1 லட்சம் ரூபாய்; பிற நகரங்களில், 50 ஆயிரம் ரூபாய் அபராதம்; டூ - வீலர் நிறுத்துமிடம் விதிமீறல் இருந்தால், 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
l திறந்தவெளி ஒதுக்கீட்டு கட்டணம், வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் கணக்கிடப்படும். தற்போது அமலில் உள்ள, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி கட்டணம், வளர்ச்சி கட்டணங்கள் வரன்முறை கட்டடங்களுக்கு பொருந்தும்.
No comments:
Post a Comment