கால அவகாசம் தராமல், அடுத்தடுத்து பணி வழங்குவதால், வி.ஏ.ஓ.,க்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். தமிழகம் முழுவதும், 12,500 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்கள் உள்ளன. இதில், 2,500 பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன.வி.ஏ.ஓ.,க்கள், பிறப்பு, இறப்பு, வாரிசு, ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்க, பரிந்துரைக்கின்றனர்.மேலும், இலவச வேட்டி, சேலை, வறட்சி நிவாரண கணக்கெடுப்பு, சீமை கருவேல மரங்கள் அகற்றுவது என, பல்வேறு பணிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால், அவர்கள், பணிப்பளுவால் அவதிப்படுகின்றனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க பொது செயலர், செல்வன் கூறியதாவது:தாசில்தார்கள், தங்கள் பதவியைக் காப்பாற்றி கொள்வதற்காக, எங்களின் பணிச்சுமை குறித்து, உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதில்லை. கால அவகாசம் இல்லாமல், அடுத்தடுத்து பணிகளை வழங்குவதோடு, தொடர் அறிக்கை கேட்கின்றனர்.வறட்சி நிவாரண கணக்கெடுப்பு விபரங்களை, 'சிடி'யாக கேட்கின்றனர். கணினி சாதனங்கள் இல்லாத நிலையில், எப்படி 'சிடி' வழங்க முடியும். இப்பணி முழுமையாக முடியாத நிலையில், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. வி.ஏ.ஓ.,க்களை மேற்பார்வையிடும், ஆர்.ஐ., துணை தாசில்தார், தாசில்தார், ஆர்.டி.ஓ., - டி.ஆர்.ஓ., என ஒவ்வொருவரும், தனித்தனி யாக உத்தரவுகளை பிறப்பிப்பதால், எந்த பணியை மேற்கொள்வது எனத் தெரியாமல், வி.ஏ.ஓ.,க்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இதுபோன்ற பணிச்சுமை காரணமாக, தஞ்சாவூர் மாவட்டம், தலையாமங்கலம் - வி.ஏ.ஓ., வெங்கடேசன், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான தாசில்தார், ஆர்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில், உடனடியாக வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment