தமிழக அரசு ஆண்டுதோறும் கல்வியில் சிறந்த சேவை செய்யும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் தேர்வு செய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் மாநில நல்லாசிரியர் விருது வழங்குகிறது. ஆனால் இந்த ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் சமுதாயத்தில் இதற்கான எந்தவித அங்கீகாரமும் இன்றி பரிதாபமான நிலையில் உள்ளார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா விருது பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து தக்க உத்தரவுகளை வரும் ஆசிரியர் தினத்தில் அறிவிக்க விருது பெற்ற ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆண்டுதோறும் மாநிலம் முழுதும் சுமார் 300 ஆசிரியர்களை மாநில அரசு தேர்வு செய்து வெள்ளிப் பதக்கம், நற்சான்றிதழ் மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்குகிறது. இந்த ஆசிரியர்களின் பெரும்பாலானோர் தங்களது பணிக்காலத்தை நிறைவு செய்யும் நிலையில் இருப்பவர்கள். விருது பெறும் அன்றோடு அவர்களுக்கும் இந்த விருது பெற்றதே மறந்துவிடும். காரணம் எந்தவித ஊக்க ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, பதவி நீட்டிப்போ மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
தற்போது மாநில நல்லாசிரியர் விருது பெற்று பணியில் உள்ளவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சியில் விருது பெற்றவர்களே. சில மாநில அரசுகள் விருது பெறும் ஆசிரியர்களுக்கு இரு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு தருகிறது. மேலும் ஒரு ஊக்க ஊதிய உயர்வு (இரு ஊதிய உயர்வு) வழங்குகிறது. இது குறித்த கோரிக்கைகளை எந்த ஒரு ஆசிரியர் சங்கங்களும் தமிழக அரசுக்கு முன்வைப்பதில்லை. மாநில நல்லாசிரியர் விருது பெறுவது என்பது சுலபமான காரியம் இல்லை. பல்வேறு ஆய்வுகள், தர மதிப்பீடுகளின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் குழு பரிசீலனை செய்து பின்னர் வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் ஆசிரியர்கள் தினத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்த ஆசிரியர்களிடம் மேலோங்கியுள்ளது.
தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்று பணியில் உள்ளவர்களுக்கு ஓய்வு பெறும் வயதை இரு ஆண்டுகள் கூடுதலாக்க வேண்டும். மேலும் அவர்களின் பணி நிலைக்கு ஏற்ப ஒரு பதவி உயர்வு வழங்க வேண்டும். (இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி).
ஒரு ஊக்க ஊதியம் (இரு ஊதிய உயர்வு) வழங்க வேண்டும். அரசுப் பேருந்துகளில் தமிழகம் முழுவதும் குடும்பத்துடன் பணிக்க பஸ் பாஸ் வழங்க வேண்டும். இந்த ஆசிரியர்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு தமிழகத்தில் சுங்கச் சாவடிக் கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும். இதுபோன்ற அங்கீகாரங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்து தந்து நல்லாசிரியர் விருது பெற்றவர்களை மேலும் வாழ்நாள் முழுவதும் கௌரவிக்கும் வகையில் செய்ய வேண்டும்.
இதுபோன்ற அங்கீகாரத்தை நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு அளிப்பதால், அரசிற்கு மிக அதிகமான நிதிச் சுமை ஏதும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் குறைந்த அளவிலே இதுபோன்ற ஆசிரியர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment