போளூர் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவண்ணாமலை, நகராட்சி டவுன்ஹால் நடுநிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் க.சிவக்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர் கு.பாரதி, மாவட்ட பொருளாளர் சி.பாபு ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.தியாகேசன் வரவேற்றார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், தமிழக முதல்வராக 6-ஆவது முறையாக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பாராட்டுத் தெரிவிப்பது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முழுநேர துப்புரவாளர்களுக்கு இரவுக் காவலருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். போளூர் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை உருவாக்க வேண்டும். ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளராக பணிமாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment