இந்தியாவில் மருத்துவம் படிக்க, அகில இந்திய அளவில் ஒரே ஒரு பொது நுழைவுத் தேர்வு மட்டுமே இருக்க வேண்டும். இத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே இந்தியாவின் அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, பல வாதங்களையும், விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.
நுழைவுத் தேர்வு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளின், தனியார் மருத்துவ பல்கலைக் கழகங்களின் வசூல் வேட்டையை கட்டுப்படுத்தும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இது தமிழகத்தை எந்த அளவு பாதிக்கும் என்கிற விஷயத்தை, போகிற போக்கில் புறந்தள்ளி விட முடியாது.
நாடு முழுவதுமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, 10 லட்சம். தமிழகத்தில் மட்டுமே மாநில பாடத்திட்டத்தில் கிட்டத்தட்ட இவ்வளவு பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். மற்ற மாநிலங்களையும் சேர்த்து பார்க்கும்போது, கோடிக்கணக்கான மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் சிறப்பாக படித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல், அவரவர் மாநில மொழியில், தாய்மொழியில் புரிந்து படித்து வருகின்றனர். எனவே, இவர்களை மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்காக, சி.பி.எஸ்.இ., அடிப்படையில் வா என்று சொல்வது, தற்போது இருக்கும் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாறி, கல்வி வியாபாரத்துக்கு வழிவகுக்குமே தவிர, வேறு எதுவும் நடக்காது.
அதற்கு பதிலாக, சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில பாடத் திட்டங்களுக்கும் பொதுவாக அமைகிற மாதிரி ஒரு நுழைவுத் தேர்வை நடத்துவது தான் சரியாக இருக்க முடியும். காலுக்கு பொருத்தமாக செருப்பு வாங்குவது தான் அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமே தவிர, 'இந்த உசத்தியான செருப்பை ஏற்கனவே வாங்கி விட்டேன். எப்படியாவது உன் காலை இதற்கேற்ற மாதிரி வெட்டிக் கொள்' என்று சொல்வது, சமூகத்தில் அமைதியின்மையையே ஏற்படுத்தும்.
மருத்துவ நுழைவுத் தேர்வு ஒருபுறமிருக்க, இதோடு ஐ.ஐ.டி., மற்றும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளையும் இணைத்து, 'தமிழகம் பின்தங்கி விட்டது; பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும்' என்று குரல் எழுப்பப்படுகிறது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளான சிவிஸ் சர்வீசஸ் தேர்வுகள், கல்லுாரியின் பட்டப்படிப்புக்கான, 'சிலபஸ்' அடிப்படையில் நடப்பதால், பல ஆண்டுகளுக்கு முன்னரே பீஹார், ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களும், தங்கள் மாநில பல்கலைக் கழகங்களை அறிவுறுத்தி, தங்களது அத்தனை பட்டப்படிப்புக்கான சிலபசையும் மாற்றிவிட்டன.
இவ்விரண்டு மாநில சிலபஸ், சிவிஸ் சர்வீசஸ் பாடத் திட்டத்தின் அடிப்படையில் தான் அமைக்கப்பட்டுள்ளன என்பதால், இந்த இரண்டு மாநில மாணவர்களும், அதிக அளவில் சிவிஸ் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர் என்பது சிலர் மட்டுமே அறிந்த செய்தி. இதை, நம் மாநிலமும் பின்பற்றலாம்; தவறில்லை!
ஆனால், இந்த இரண்டு அகில இந்திய நுழைவுத் தேர்வுகளையும் ஆங்கிலம் தவிர, எதற்காக இந்தியில் மட்டும் நடத்த வேண்டும்? பீஹாரில் இருந்து அதிகம் பேர் ஐ.ஐ.டி.,யில் சேர்கின்றனர் என்பதற்கு, இது தான் அடிப்படை காரணம் என்பது கூட உங்களுக்கு புரியவில்லையா? மருத்துவ நுழைவுத் தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்தினால், நம்ம ஊர் தமிழ் வழிக்கல்வி மாணவன் என்ன செய்வான்?
டில்லியிலும், பீஹாரிலும், உத்தர பிரதேசத்திலும் இருப்பவன், இந்தியில் தேர்வு எழுதி, நம்ம ஊர் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்து விடுவான்; படித்த பிறகு, தன் ஊர் பார்க்கப் போய் விடுவான். நம்மூரை கவனிக்கவும் ஆளிருக்காது; நம்ம பையனும் மாடு மேய்த்துக் கொண்டிருப்பான்!
இப்படி மொழி சார்ந்த பிரச்னை ஒருபுறமிருக்க, அடுத்து, பொருளாதாரம் சார்ந்த பிரச்னைக்கு வருவோம். நுழைவுத் தேர்வு என்று ஒன்று வந்து விட்டாலே, 'கோச்சிங் சென்டர்' என்கிற விஷயம், கூடவே வந்து விடுகிறது.
ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு என்பது, பிளஸ் 1, பிளஸ் 2 சிலபஸ் அடிப்படையில் மட்டும் நடக்கும் சூழலில், '6ம் வகுப்பிலிருந்தே கோச்சிங் கொடுக்கிறேன்' என்று இந்த கோச்சிங் சென்டர்கள் சொல்வது, எவ்வளவு பெரிய வியாபாரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, இந்த நுழைவுத் தேர்வுகள், கோச்சிங் சென்டர் வியாபாரத்தை, இன்னும் விரிவுபடுத்த மட்டுமே உதவும்.முன்பெல்லாம், கிராமங்களில் வீட்டுக்கு ஒருவர், வளைகுடா நாடுகளுக்கு சென்று வேலை பார்த்து குடும்பத்தை உயர்த்தினர்; இன்று அதே குடும்பங்களிலிருந்து வீட்டுக்கு ஒருவர், சாப்ட்வேர் துறையில் நிபுணத்துவம் பெற்று, அமெரிக்காவில் வேலை பார்க்கின்றனர்.
இதில், 99 சதவீதம் பேர் மாநில பாடத் திட்டத்திலும், நம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரிகளில் படித்தவர்கள் தான் என்பதை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமே தவிர, தமிழன் எதை நினைத்தும் தலைகுனிய வேண்டிய அவசியம் இல்லை!
No comments:
Post a Comment