சென்னை குமரன் நகரில் பிளஸ் 2 மறு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, நண்பனுக்காக கணிதத் தேர்வு எழுதிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (18). கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த இவர், கணிதத் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.
இந்த நிலையில், சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பாடத்தின் மறு தேர்வு புதன்கிழமை நடைபெற்றது. தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும்போது, பறக்கும் படையினர் அந்தத் தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு பிரபாகரன் பெயரில், வேறு ஒருவர் தேர்வு எழுதுவதைப் பார்த்து பறக்கும் படையினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே பறக்கும் படையினர், அந்த இளைஞரைப் பிடித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைததனர். விசாரணையில் அந்த இளைஞர் வேளச்சேரி நேரு நகர் இளைய முதலித் தெருவைச் சேர்ந்த அ.சஞ்சித் (19) என்பதும் அவர் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் சஞ்சித்தை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பிரபாகரனையும் உடனடியாக கைது செய்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment