அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டங்கள் தொடரும் என அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் கண்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; காலவரையற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள், நெடுஞ்சாலைத் துறை, வணிகவரித் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க கூட்டணியினர் திங்கள்கிழமை(பிப்.15)முதல் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அரசுத் தரப்பில் இதுவரை முறையான எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அமைச்சர்கள் சிலர் எங்களது கோரிக்கைகளை கேட்டுள்ளனர். முதல்வரிடம் தெரிவித்து நல்ல அறிவிப்பை வெளியிடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கத்துக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.14) நடைபெறுகிறது. இம் முகாம்களில் பணியாற்றக்கூடிய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அப் பணிகள் முற்றிலும் முடங்கும்.
சத்துணவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும் என்றார்.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசினார். கூட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, செயலர் வெங்கடேசன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் பவுல் ஆபிரகாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment