திருப்பத்தூர் அருகே வீட்டுப்பாடம் செய்யாததால் பள்ளிக்குச் செல்ல பயந்து கடத்தல் நாடகமாடிய சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த மடவாளம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சஞ்சய் (10). இவர் அகரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை சஞ்சய் வழக்கம் போல் பள்ளிக்கு மிதிவண்டியில் சென்றார். சிறிது நேரத்தில் சஞ்சய், அப்பகுதியில் உள்ள ஒருவரின் செல்லிடப்பேசியில் தனது தந்தை செல்வத்தை அழைத்து, தன்னை இருவர் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று விட்டதாகவும், தன்னைக் காப்பாற்றுமாறும் கூறி செல்லிடப்பேசியை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து செல்வம் குரிசிலாப்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உதவி காவல் ஆய்வாளர் இளவரசன் தலைமையில் போலீஸார் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சஞ்சய் அங்குள்ள ஏரிக்கரையில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் சஞ்சயை மீட்டு அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் சஞ்சய் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியதால் சந்தேகமடைந்த போலீஸார் மாணவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.
அப்போது அரையாண்டு விடுமுறையில் வீட்டுப் பாடங்கள் எதையும் சஞ்சய் செய்யவில்லை என்பதும், இதனால் பள்ளிக்குச் சென்றால் ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என பயந்து மர்மநபர்கள் கடத்தி விட்டதாகப் பொய் கூறியதும் தெரியவந்தது.
இதையடுத்து மாணவருக்கு அறிவுரை கூறிய போலீஸார் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment