சென்னை:சட்டசபை தேர்தல் தேதியை நிர்ணயம் செய்வதற்காக, பள்ளி மற்றும் கல்லுாரி தேர்வு தேதி விவரங்களை, தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது.தமிழகத்தில் மே மாதத்திற்குள், சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, அனைத்து கட்சிகளும் துவக்கி உள்ளன. எப்போது தேர்தல் தேதி
அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்தல் கமிஷனும், தேர்தலுக்கான ஏற்பாடுகளை துவக்கி விட்டது. தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக, தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி தேர்வு தேதி விவரத்தை, தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் தேர்வு நடைபெறும் தேதி விவரங்களை, தேர்தல் கமிஷன் கேட்டது. நேற்று, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான, தேர்வு அட்டவணை
அனுப்பப்பட்டுள்ளது.பல்கலைக் கழகம் மற்றும் கல்லுாரி தேர்வு தேதி விவரம் கேட்டுள்ளோம்; வந்தவுடன், தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்படும்.தமிழகம் முழுவதும், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நிறைவடைந்துள்ளது. திட்டமிட்டபடி, 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
சட்டசபை தேர்தல் தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகள், கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க, தேர்தல் கமிஷனர்கள், பொங்கலுக்கு பின் தமிழகம் வர உள்ளனர், என்றார்.
சமூக வலைதளங்களைகண்காணிக்க ஏற்பாடு
சட்டசபை தேர்தலில், அரசியல் கட்சிகள், சமூக வலைதளங்கள் மூலம், அதிக அளவில் பிரசாரம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, 'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களையும் கண்காணிப்பதற்காக, அமெரிக்காவின், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்திடம் இருந்து, தேர்தல் கமிஷன், புதிய, 'சாப்ட்வேர்' வாங்கி உள்ளது.சமூக வலைதளங்களில், வேட்பாளர் பெயரில் தேர்தல் பிரசாரம் செய்தால், அதற்கான செலவு, வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும். வேட்பாளர் பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட கட்சி செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
வேட்பாளர் அனுமதியின்றி, அவரது பெயரில், வேறு எவரேனும் பிரசாரம் செய்தால், அவருக்கு தண்டனை வழங்குவது குறித்து, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.
அதே போல், 'வாட்ஸ் ஆப்' மூலம் மேற்கொள்ளப்படும் பிரசாரத்தை கண்காணிப்பது குறித்தும், தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.
No comments:
Post a Comment