மழை- வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா அரை கிலோ பிளீச்சிங் பவுடர், 20 குளோரின் மாத்திரைகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளோர் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறையினர் மேலும் கூறியதாவது:
மருத்துவ முகாம்களிலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காயமடைந்தவர்களுக்கு ரணஜன்னி தடுப்பூசி போடப்படுகிறது. தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் முகாமில் வழங்கும் தண்ணீரையே அருந்த வேண்டும். முகாம் பொறுப்பாளரிடம் தாற்காலிக கழிவறை வசதியை ஏற்படுத்தித் தர கோரலாம்.
குளங்கள், திறந்தவெளிக் கிணறுகளிலிருந்து தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டாலோ, காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகமாகத் தென்பட்டாலோ 044- 2435 0496, 2433 4811, 94443 40496, 93614 82899 என்ற பொது சுகாதாரத் துறை அறையின் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இறந்து போன விலங்குகள், பறவைகளைக் காண நேர்ந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
குடிநீர் பாதுகாப்பு: வீடுகளில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டிகளில் சரியான அளவு குளோரின் இருப்பதற்கு 1000 லிட்டருக்கு (33 சதவீதம் குளோரின் உள்ள) பிளீச்சிங் பவுடரை 4 கிராம் வீதம் எடுத்து, ஒரு வாளியில் எடுத்து பசை போல் கரைக்க வேண்டும்.
வாளியில் முக்கால் பகுதி அளவுக்கு வரும் வரை தண்ணீர் கலந்து, சுண்ணாம்பு, பிற வண்டல் அடிப்பாகத்தில் தங்குவதற்கு 15 நிமிஷங்கள் காத்திருக்க வேண்டும். பின்பு தெளிந்த குளோரின் நீரை நீர் தேக்கத் தொட்டியில் கலக்கி, ஒரு மணி நேரம் கழித்து நீரை பயன்படுத்தலாம்.
தரை மட்ட- மேல்நிலை குடிநீர் தொட்டிகள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றிலும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
இதுதவிர, கூடுதல் தகவல், மருத்துவ உதவிகள் பெற 104 சேவை எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
No comments:
Post a Comment