சனிக்கிழமைகளிலும் பள்ளி இயங்குவதன் மூலம் மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் வடியத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், அந்த நாட்களை ஈடுகட்டும் வகையில் ஜனவரி மாதம் வரை சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. சில அரசு பள்ளிகளும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பள்ளி பணிநேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நாட்களில் நடத்தப்படாத பாடங்கள் அனைத்தையும் நடத்தி முடிப்பதற்காக விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கூடங்கள் நடைபெறும் என தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவித்திருக்கின்றன.
சென்னையில் பேரழிவை ஏற்படுத்திய மழை மனிதர்களுக்கு மறக்க முடியாத பல பாடங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறது. பல மாணவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை மழை, வெள்ளத்திற்கு பலி கொடுத்திருக்கின்றனர். சாவின் விளிம்பு வரை சென்று நல்வாய்ப்பாக மீண்டு வந்த மாணவர்களும் உண்டு. இந்த மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் மீண்டு வருவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம்.
மாணவர்கள் பற்றிய இந்த உளவியலை பள்ளி நிர்வாகங்கள் புரிந்து கொண்டு அவர்களுக்கு மன நல ஆலோசனைகளை வழங்க வேண்டும்; கவலைகளை மறந்து, சக மாணவர்களுடன் கலந்து மகிழ்ச்சியாக விளையாடப் பழக்க வேண்டும்; அதன்பிறகு தான் பாடம் என்பதையே அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயல்பு நிலைக்கு வருவார்கள். இவற்றையெல்லாம் விடுத்து, பள்ளி திறந்த முதல் நாளிலேயே மொத்த புத்தகங்களையும் கையில் கொடுத்து படித்து ஒப்புவிக்கச் செய்வதற்கும், விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துவதற்கும் அவர்கள் ‘ஓவர்டைம்’ வேலை செய்யும் ரோபோக்கள் அல்ல... குழந்தைகள் என்பதை கல்வியாளர்கள் உணர வேண்டும்.
எனவே, அரசு பள்ளிகளாக இருந்தாலும், தனியார் பள்ளிகளாக இருந்தாலும் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே வலியுறுத்தியதைப் போல அரையாண்டுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; அதேபோல் ஆண்டுத் தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அத்துடன் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவர்களுக்கு அடுத்து வரும் பருவங்களுக்கான கல்விக் கட்டணத்தையும் இரத்து செய்ய தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment