தமிழகத்தில் கணினி பயிற்றுநர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் விவகாரம் தொடர்பான வழக்கை இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்தப் பணியிடங்கள் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து, இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தனர். அதில், "1990-ஆம் ஆண்டில் இடஒதுக்கீட்டில் விதவை, கலப்பு திருமணம் செய்தவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணையில் திருத்தம் செய்தது. இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பான வழக்கில், 117 பணியிடங்களை நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அந்த தடையை நீக்கி, திருத்தம் செய்யப்பட்ட அரசாணை மூலமே கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அவமதிப்பு வழக்கு: இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஆறு வாரங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். அதன் அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்று கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்று இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் சிலர், தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபீதாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரஃபுல்லா சி.பண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கை இரண்டு மாதங்களுக்குள் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து பிறப்பிக்கும் உத்தரவை உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment