காஞ்சிபுரத்தில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ் 1 மாணவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சக மாணவர் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சின்ன காஞ்சிபுரம் சி.எஸ்.செட்டி தெருவைச் சேர்ந்த பாபு மகன் ஜானகிராமன் (16). இவர் பெரிய காஞ்சிபுரம் கா.மு.சுப்பராயமுதலியார் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருடன் காஞ்சிபுரம் அறப்பெரும் செல்வி தெருவைச் சேர்ந்த தருமன் மகன் சரத்குமாரும் (17) படித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே புதன்கிழமை பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரத்குமார், ஜானகிராமனை கையால் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவர் ஜானகிராமன் நிலைத்தடுமாறி மயங்கி கீழே விழுந்தார்.
இந்த சம்பவத்தை பார்த்த வகுப்பாசிரியை சிவகாமி, பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். பிறகு மயங்கிய நிலையில் கிடந்த மாணவன் ஜானகிராமனை ஆசிரிர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவர் ஜானகிராமன் புதன்கிழமை நள்ளிரவு இறந்தார்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர் சிவகாமி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து போலீஸார் சகமாணவர் சரத்குமாரை வியாழக்கிழமை கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நீதிமன்றம் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சரத்குமாரை சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment