Pages

Friday, July 15, 2016

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது: பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மூடுவதைத் தவிர்த்து புதிதாக அரசு பள்ளிகள் தொடங்கி காமராஜர் கண்ட கனவை நிறைவேற்ற வேண்டும் என விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்வித் திருவிழாவில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.


 பெருந்தலைவர் காமராஜரின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கேவிஎஸ். மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கல்வித் திருவிழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது: காமராஜர் காலத்தில் மூடப்பட இருந்த பள்ளிகளைப் பாதுகாத்ததோடு மட்டுமில்லாமல், ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார்.

தனியார் பள்ளிக் கூடங்கள் புற்றீசல் போல் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது புதிய பள்ளிகள் திறக்கப்படுவதில்லை, ஆனால், 2,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இலவச கல்வி அழிக்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழக அரசு, பள்ளிகளை மூடுவதைத் தவிர்த்து, புதிதாக அரசு பள்ளிகள் தொடங்கவும், தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது நாம் காமராஜர் கண்ட கனவை நிறைவேற்ற முடியும். குளச்சல் வர்த்தக துறைமுகத்தை சரியான முறையில் பயன்படுத்தி தொழில் தொடங்க வேண்டும் என்றார் அவர்.

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி: காமராஜர் பிறந்த தின விழாவை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட சட்டம் கொண்டு வந்தவர் கருணாநிதி. முதல்வர் ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்தபோது தமிழகமே கொந்தளித்தது. அதனால், ராஜாஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற காமராஜர், குலக்கல்வி திட்டத்தை அறவே ஒழித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் 7 சதவீதமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. மத்திய அரசு சார்பில் செயல்படும் மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டுவதற்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கே.வி.எஸ். மேல்நிலை பள்ளியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது: நான் மருத்துவராக ஆவதற்கு முக்கிய காரணம் காமராஜர் தான். அவரது ஆட்சியில் 6,000 ஆக இருந்த பள்ளிகளை 12,000 மாக உயர்த்தினார். பள்ளிக் கல்வி மட்டுமே படித்திருந்தாலும், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புலமை பெற்றவர். இரண்டு முறை பிரதமர் பதவி கிடைத்த போதும் ஏற்க மறுத்தவர் என்றார் அவர்.

 தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர்   நீதியரசர் வெ. ஈஸ்வரய்யா, பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் காமராஜர் இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

No comments:

Post a Comment