பாடப் புத்தகங்களை பயிற்றுவித்தல் என்ற எல்லையைத் தாண்டி, மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த ஆசிரியர்கள் முனைப்புக்காட்ட வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி.
நாகை, பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதுநிலை இயற்பியல் மற்றும் வேதியியல் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்புப் பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்து அவர் பேசியது:
வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் போட்டிகள் நிறைந்த வேலைவாய்ப்புக்கு ஏற்ப மாணவர்களைத் தயார் செய்து, அவர்களை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்தும் கடமை ஆசிரியர்களைச் சார்ந்துள்ளது.
பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களை கற்பித்து, மாணவ, மாணவிகளைத் தேர்ச்சிப் பெறச் செய்வது மட்டும் போதுமானது என்ற எல்லையைத் தாண்டி, ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் உள்ள தனித் திறனை வெளிக்கொணர வேண்டும்.
ஒவ்வொரு பாடத்திலும் சிறு, சிறு தேர்வுகள் நடத்தி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும், செய்முறை தேர்வுகளின் மூலம் மாணவர்களிடையே கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யவும் ஆசிரியர்கள் முனைப்புக்காட்ட வேண்டும் என்றார் ஆட்சியர் சு. பழனிசாமி.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. கஸ்தூரிபாய், மாவட்டக் கல்வி அலுவலர் வேதரெத்தினம், சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் த. ஆனந்த் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment