மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்தை இறுதி செய்ய உடனடியாக ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு விவரம்: தமிழக அரசு, ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அனைவருக்கும் பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர், ஆசிரியர் தொடர்பான நிர்வாக ரீதியான வழக்குகளுக்கு என்று தனியாக நிர்வாகத் தீர்ப்பாயம் அமைக்க உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஏற்கெனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு படிகள் அனைத்தையும் வழங்கவும், ஊதிய முரண்பாடுகளை களைந்து ஊதிய மாற்றம் வழங்கவும், ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு என்று அரசே ஒரு காப்பீட்டு நிறுவனத்தை தனியாக உருவாக்கி, அதன் மூலம் அத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அளித்துள்ள பல்வேறு ஆலோசனைகளை பரிசீலித்து அதையும் இணைத்து அத்திட்டத்தை மேம்படுத்தி சிறப்பான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக அமல்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment