Pages

Thursday, July 14, 2016

அமைச்சருக்காக காத்து கிடந்த மாணவர்கள்

சென்னை: பி.வி.எஸ்சி., எனப்படும், கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில், இடம் தேர்வு செய்தும், துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வராததால், ஒதுக்கீட்டு கடிதம் பெற, மாணவர்கள் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவில் பல்கலையின் கீழ், நான்கு அரசு கல்லுாரிகளில், பி.வி.எஸ்சி., என்ற, ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புக்கு, 320 இடங்கள்

உள்ளன. பி.டெக்., உணவு தொழில்நுட்பம், கோழி இன உற்பத்தி, பால் வள தொழில்நுட்ப படிப்புகளில், தலா, 20 இடங்கள் என, 60 இடங்கள் உள்ளன. 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, பிற, பி.வி.எஸ்சி., இடங்களுக்கான கலந்தாய்வு, சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவில் பல்கலையில், நேற்று முன்தினம் துவங்கியது.

'கட் - ஆப்' : சிறப்பு பிரிவுகளில், 28 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற நிலையில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, நேற்று நடந்தது. 234 இடங்களுக்கு, 1,600 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். தர வரிசையில், 197.00 'கட் - ஆப்' மதிப்பெண்ணுடன், முதலிடம் பெற்ற தஞ்சாவூரைச் சேர்ந்த, ஜேன் டேனிகன் என்ற மாணவர், ஒரத்தாடு கல்லுாரியை தேர்வு செய்தார்.

இதுகுறித்து ஜேன் டேனிகன் கூறுகையில், ''நான், தஞ்சாவூரில் உள்ள அரசு கல்லுாரியில், பி.எஸ்சி., அக்ரி சேர்ந்து படித்து வந்தேன். நல்ல கட்-ஆப் உள்ளதால், பி.வி.எஸ்சி., சேரும்படி, நண்பர்கள் உற்சாகப்படுத்தினர். அதனால், இந்த படிப்பில் சேர்ந்துள்ளேன். சிறந்த கால்நடை மருத்துவராக வருவேன்,'' என்றார்.

தாமதமானது : கலந்தாய்வு, காலை, 9:00 மணிக்கு துவங்கியது. தரவரிசையில், முதலிடம் பெற்ற, 17 பேரும், சில நிமிடங்களில் இடங்களை தேர்வு செய்தனர். 'முதல், 17 பேருக்கும் அமைச்சர் வந்து ஒதுக்கீட்டு கடிதம் தருவார்' எனக்கூறி, காக்க வைக்கப்பட்டனர். ஆனால், அமைச்சர் வர தாமதமானது. அதன் பின், 'பகல், 12:30 மணிக்கு வருவார்' என, தெரிவிக்கப்பட்டது; குறித்த நேரத்தில் அவர் வராததால், மாணவர்கள் பல மணி நேரம், சோர்வுடன் காத்துக்கிடந்தனர். அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, பிற்பகல், 2:00 மணிக்கு வந்து, ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். நேற்று, பி.வி.எஸ்சி., படிப்பில், பெரும்பாலான இடங்கள் நிரம்பின. பி.டெக்., உணவு உற்பத்தி தொழில்நுட்பம், கோழி இன உற்பத்தி தொழில்நுட்பம், பால் வள தொழில் நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வு, இன்று நடக்கிறது.

No comments:

Post a Comment