Pages

Thursday, July 14, 2016

ஏன் இத்தனை குளறுபடிகள்?

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம்போல கலந்தாய்வு தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக, விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டனர்.


கலந்தாய்வு மூலமாக மாணவர்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ப அவர்கள் விரும்பிய கல்லூரிகளைத் தேர்வு செய்திட வாய்ப்பு அமைந்திருப்பது பயன்தரக்கூடியதுதான். அதே வேளையில் இக்கலந்தாய்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதைக் காண முடிகிறது.

தமிழகத்தில் உள்ள அத்தனை பொறியியல் கல்லூரிகளுக்கும் தலைமையிடமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இருக்கிறது. எனவே மாணவர்களை தலைநகருக்கு வரவழைப்பதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதை நேரில் கண்டு உணர்ந்த பெற்றோர்களுக்குத்தான் அந்த துன்பம் தெரியும். கலந்தாய்வு தேதி அறிவித்த பிறகு இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், கிராமப்புற மாணவர்களால் முழுமையாக இதை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. வேறு வழியின்றி பல்வேறு சிரமங்களுக்கிடையே விண்ணப்பித்து விடுகின்றனர். அதன்பிறகுதான் தலைவலி ஆரம்பமாகிறது. தங்கள் குழந்தைகள் நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இன்றைக்குப் பெற்றோர் தகுதிக்கு மீறி செலவழிக்க வேண்டியிருக்கிறது.

இதில் ஏழைகள் பாடு திண்டாட்டமே. முதல்நாளே சென்னை வந்து, தங்க இடம் தேடி, மறுநாள் காலையில் காத்துக் கிடந்து கலந்தாய்வுக்குச் செல்ல வேண்டும். இதற்காக சாப்பாடு, இதர தேவைகளுக்கு அதிக தொகை செலவழிக்க வேண்டியிருக்கிறது. இப்படி வருபவர்கள் ஆங்காங்கே மரத்தடியிலும், மைதானம், புல்வெளிகளிலும் தங்கியிருக்க வேண்டும்.

இவர்களுக்காக வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது. ஆனால் நேரில் சென்றால்தான் உண்மை தெரிகிறது. அங்கே ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருக்கிறது. அதில் ஆண்களும், பெண்களும் வரிசையாக பல மணி நேரமாகக் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. உள்ளே சென்றவர் திரும்பி வரும்வரை வயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும், இதில் முதியோர், பெண்கள் பாடு திண்டாட்டம்.

இதைத் தவிர்க்க மேலும் சில கழிப்பறைகளை அமைத்தால் நல்லது. இதில் வேதனையான விஷயம் திடீரென தண்ணீர் நின்றுவிடுவது. இது ஒருபுறமிருக்க, சுமார் இரண்டு கி.மீ. தொலைவுக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னரே வரிசையில் நிற்க வேண்டும். ஆமை வேகத்தில்தான் வரிசை முன்னேறுகிறது. அந்த இடைப்பட்ட நேரத்தில் பசி, இயற்கை உந்துதல் வந்துவிட்டால் நம்கதி அதோகதிதான்.

மேலும் கையில் கொண்டு சென்றிருக்கும் பைகள், சுமைகளையும் கூடவே எடுத்துச் செல்ல வேண்டும். இதை வைத்திருக்க பாதுகாப்பு அறை அமைத்து அடையாள அட்டை வழங்கலாம். அதுவும் இல்லை.

இந்த சோதனைகளைக் கடந்து கலந்தாய்வை முடித்தபிறகு சாப்பிடவோ, தேநீர் அருந்தவோ விரும்பினால் அங்கு சுவையே இல்லாத தேநீர், குளிர்பானங்கள் கிடைக்கின்றன. சாப்பிட விரும்பினால் உணவு என்ற பெயரில் அரைகுறையாக வெந்தவை, வேகாதவை விற்கப்படுகின்றன. விலையோ மிக மிக அதிகம். இதற்கும் கூட்டம் அலைமோதுகிறது.

ஒரு வழியாக வயிற்றுப்பசி அடங்கி வந்தால், மருத்துவ அறிக்கை எடுக்க வேண்டுமென்று ரூ.200 கட்டணம் பெறப்படுகிறது. இந்த ஆய்வுக்குச் செல்ல பல்கலைக்கழகத்தின் மறுமுனைக்கு சுமார் ஒரு கி.மீ. தொலைவு மேல் நடந்து போக வேண்டும், அதற்குள் கால்கள் அசந்து விடுகின்றன. அங்கும் கூட்டம் அலைமோதுகிறது. காத்துக் கிடந்து மருத்துவ ஆய்வை முடித்து அறிக்கையை வாங்கி வர வேண்டும்.

அதெல்லாம் முடிந்து வெளியே வந்தால் கும்பலாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் (தனியார் கல்லூரிகளின் விளம்பரம்), தொல்லைகள். தங்களது கல்லூரியில் தரமான கல்வி கற்கலாம் என்ற வாக்குறுதிகளுடன் நுழையும்போதே ஒரு கும்பல் சுற்றித் திரிகிறது. இதிலிருந்து பெற்றோரும், மாணவர்களும் தப்பித்து வருவதே பெரும்பாடாக இருக்கிறது.

இத்தனைக்கும் பிறகு தங்கள் ஊருக்குப் போகும் பேருந்து நிலையத்திற்கு செல்ல நினைத்தால் ஆட்டோக்களின் கடுமையான கட்டணம் கிராமப்புற பெற்றோர்களை வாட்டி வதைக்கிறது. அரசுப் பேருந்துகள் இருந்தாலும் அதற்கு காத்திருப்பதிலேயே நேரம் விணாகும். எனவே, ஆட்டோவை நாடுகிறார்கள்.

இந்த தனியார் வாகனங்களின் போக்கு மிக மோசமாக இருக்கிறது. வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி வைத்துக் கொண்டு மணிக்கணக்கில் ஆள் சேர்ந்தபிறகே இயக்குகின்றனர். இறங்கும் வரை கட்டணம் குறித்து வாயைத் திறப்பதில்லை. இறங்கியபிறகு தாறுமாறாக கட்டணம் கேட்டு தொல்லை செய்கின்றனர். இதனால் தகராறு ஏற்படுகிறது.

வெளியூரிலிருந்து வந்தவர்கள் குறித்த நேரத்துக்கு தங்கள் ஊர்களுக்குச் செல்லும் பேருந்து, ரயில்களைப் பிடிக்க வேறு வழியின்றி கேட்கும் தொகையைக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இப்படிப் பல்வேறு இன்னல்கள். கிட்டத்தட்ட கலந்தாய்வு நடைபெறும் நாள் வரையில் பல தொந்தரவுகளைப் பெற்றோரும், மாணவர்களும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

இதைத் தவிர்க்க அந்தந்த ஊர்களில் மண்டலங்களாகப் பிரித்தே கலந்தாய்வை நடத்தலாம். ஏனெனில், அனைத்துமே இணையதளம் மூலமாகத்தான் நடத்தப்படுகிறது. இதனால் வேறு தொந்தரவுக்கு வழியில்லை. பெற்றோர், மாணவர்கள் தேவையின்றி அலைய வேண்டாமே.

இதற்கிடையே மாணவர்களுக்கு சம்பந்தபட்ட கல்லூரிகளில் சேர அழைப்புக் கடிதம் அனுப்பப்படுகிறது. இதை மின் அஞ்சலில் அனுப்பாமல் சாதாரண கடிதம் மூலமாகவே அனுப்புகின்றனர். இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்துக்கு கடிதம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

கலந்தாய்வில் குறிப்பிட்டிருந்த தேதிக்குள் செல்லுமாறு கூறப்பட்டிருந்ததால் பல மாணவர்கள் சம்பந்தபட்ட கல்லூரிக்குச் சென்றனர். ஆனால், சேர்க்கை தேதி மாற்றப்பட்டிருப்பது அங்கு சென்ற பிறகே தெரிந்தது.

காரணம், கல்லூரியிலிருந்து அனுப்பிய சாதாரணக் கடிதம் மாணவர்களுக்கு குறிப்பிட்ட தேதிக்குள் சென்றடையாததே.

இதுபோன்ற குளறுபடிகள் களையப்பட வேண்டும் என்பதே மாணவர், பெற்றோரின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment