தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான 3ஆம் கட்ட தேர்வு முகாம், சென்னையில் இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறை மூலம் பள்ளி மாணவர் - மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க நல்ல பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய 28 விளையாட்டு விடுதிகள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த விடுதிகளில் 2016-2017ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி, விளையாட்டு விடுதிக்கான 3ஆம் கட்ட தேர்வுப் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில், தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றோர், மாநில அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களில் பதக்கம் வென்றோர், தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றோர், தகுதி வாய்ந்த வீரர், வீராங்கனைகள் என்ற அடிப்படையில் பங்கேற்கலாம்.
7, 8, 9, 11ஆம் வகுப்பு மாணவர் - மாணவிகள் விளையாட்டு விடுதிகளிலும், கல்லூரி மாணவர்கள் சிறப்பு விளையாட்டு விடுதிகளிலும், 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்கள் முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளிலும் சேரலாம்.
விளையாட்டு விடுதிகளுக்கான தேர்வுப் போட்டி: தடகளம், கூடைப்பந்து, பேட்மின்டன், குத்துச்சண்டை, கால்பந்து, கத்திச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், மேஜைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, கபடி, கைப்பந்து, கையுந்துப்பந்து, டேக்வாண்டோ, பளுதூக்குதல், வாள் சண்டை, நீச்சல், வளைகோல் பந்து.
சிறப்பு விளையாட்டு விடுதிகளுக்கான தேர்வுப் போட்டி: தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்துப்பந்து, கால்பந்து, ஜூடோ.
முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளுக்கான தேர்வுப் போட்டி: தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், நீச்சல், டேக்வாண்டோ.
3ஆம் கட்டத் தேர்வில் பங்கேற்போர் அதற்கான விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வு நாளான 12ஆம் தேதி காலை 8 மணிக்கு சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேரில் ஆஜராக வேண்டும். தகுதி வாய்ந்தோருக்கு நேரடியாகத் தேர்வு நடத்தப்பட்டு, விளையாட்டு விடுதிகளில் சேர ஆணை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0462-2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
No comments:
Post a Comment